இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள், நிலைமைகளை முன்னேற்றுவதற்கு உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எல்லா தரப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்து அர்த்தமிக்க நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினாலும் எதிர்க்கட்சியினாலும் வெளியிடப்பட்டுள்ள செயற்பாடுகள், பதிற்குறிகள் மற்றும் கருத்துக்களை செயலாளர் நாயகம் வரவேற்றிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான பரிந்துரைகள் இலங்கையில் நிலையான சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு உதவுவதுடன், சர்வதேச நியமங்களுக்கேற்ற வகையில் உண்மையானதும் நம்பகமானதுமான கணக்குக் கூறும் செயல்முறை மற்றும் நல்லிணக்கத்தினூடாக மனித உரிமைகளுக்கான மதிப்பாகவும் அமையுமென பான் கீ மூன் நம்புவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
மோதல் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு உள்ளகப் பொறிமுறையை அமைக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.