ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்தவுள்ள உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை (09) சென்னையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் 27ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், செப்டெம்பர் 25ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு இலங்கை அனுமதி மறுத்து வரும் நிலையில், ஐ.நா.சபையில், இலங்கை ஜனாதிபதியை உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராஜபக்ஷ, ஐ.நா வில் பேச அனுமதி அளிப்பதன் மூலம் அதன் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு தனது விசாரணையை நடத்த வேண்டிய இடம் தமிழகம் என அவர் கூறினார்.