ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்கென தமது பிரதிநிதிகள் ஜெனிவா செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் வடக்கில் மேலும் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் விடுவித்தல் போன்ற விடயங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.