ஐ.நாவின் விசாரணை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பம் – சுமந்திரன்

sumantheranஇலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்றும், இது தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், “சமகால அரசியலும் ஜெனிவாத் தீர்மானமும்’ எனும் தலைப்பிலான மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தலைமையிலான இலங்கை அரசால் சர்வதேசசமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.

இந்த நிலையில், ஐ.நாவின் இலங்கைக்கு எதிரான விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

ஜூன் மாத நடுப்பகுதியில் சர்வதேச விசாரணை ஆரம்பமாகவுள்ளது. இந்த விசாரணை, குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதற்கப்பால் எமது தமிழின அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும். எனவே, தமிழினத்துக்கு நீதியான விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண்போகாது என்பதற்காகக் கட்டுக்கோப்புடனும், நிதானமாகவும் நாம் செயற்பட வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராஜா, செல்வம் அடைக் கலநாதன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related Posts