ஐ.நாவின் சிபாரிசுகள் பயங்கரமானவை! சர்வதேச விசாரணையே நடக்கப் போகிறது!!

ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.

gl peris

ஐ.நா. அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்க சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்புக் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், மேற்படி அறிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி கருத்து வெளியிடுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மனிதப்படுகொலை, பாலியல் வன்முறை, காணாமல்போகச்செய்தல் என முப்படையினருக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாட்சியங்கள் எதுவுமில்லாமல் அடிப்படையற்ற வகையிலேயே மேற்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. வடக்குக்கு உணவு, மருந்துகள் அனுப்புவதற்குத் தடங்கல் ஏற்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் குறித்தப் பணிகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டும் அடிப்படையற்றதாகவே இருக்கிறது. ஐ.நா. அறிக்கையில் பயங்கரமான சிபாரிசுகள் இருக்கின்றன.

இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்மென வலியுறுத்தப்பட்டுள்ளது. இது படையினரை இலக்குவைத்து முன்வைக்கப்பட்ட விடயமாகும். உள்ளக விசாரணை என்றுதான் அரசு கூறுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. சர்வதேச விசாரணைதான் நடக்கப்போகிறது.

உள்ளகப் பொறிமுறை மீது நம்பிக்கையில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அதனால்தான், சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது சர்வதேச விசாரணையேயாகும். இறுதிப்போரில் புலிகள் மக்களை பணயக் கைதிகளாகப் பயன்படுத்தினர்.

அப்போது படையினர்தான் அவர்களைப் பாதுகாத்தனர். இவ்வாறு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முன் இந்த அரசு கொண்டுசெல்லவில்லை. ஐ.நா. அறிக்கையின் பாரதூரத்தன்மை பற்றி நான் பலமுறை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். அதுபற்றி அரசு கவனம் செலுத்தவில்லை. இன்று விபரீதம் ஏற்பட்டுள்ளது” – என்றார்.

Related Posts