சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது இலங்கை அணியைத் தோற்கடித்து உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களாகத் தெரிவானது.
கொழும்பு ஆர்.பிரேமதான மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது ஓவரிலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, தங்களது முக்கியமான வீரரான கிறிஸ் கெயிலை 6ஆவது ஓவரில் இழந்தது. அப்போது அவ்வணி 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக 59 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் அவ்வணி 3ஆவது விக்கெட்டின் பின்னர் தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் மார்லன் சாமுவேல்ஸ், டரன் சமி ஆகியோர் இறுதிநேரத்தில் ஓட்டங்களைக் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 137 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக 56 பந்துகளில் 78 ஓட்டங்களையும், டரன் சமி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அஜந்த மென்டிஸ் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அன்ஜலோ மத்தியூஸ் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும், அகில தனஞ்சய 3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இரண்டாவது ஓவரின் முதலாவது பந்திலேயே திலகரட்ண டில்ஷானை இழந்த இலங்கை அணி அதன் பின்னர் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தால் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், சங்கக்காரவின் விக்கெட்டின் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 36 பந்துகளில் 33 ஓட்டங்களையும், நுவான் குலசேகர 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 26 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சுனில் நரைன் 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், டெரன் சமி 2 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சாமுவேல் பத்ரி, ரவி ராம்போல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார். போட்டித் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் ஷேன் வொற்சன் தெரிவானார்.