ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை

நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் மேஜர் ஜயனாத் ஜயவீரவே, இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் அக்குழுவோடு தொடர்புடைகளைக் கொண்டவர்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதோடு, அவை, பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வுப் பிரிவுகளும், அவ்வாறான அச்சுறுத்தல் குறித்து முழுமையான தயார் நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுக்களின் உருவாக்கம் குறித்தும் கவனத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைக் காப்பதே, பாதுகாப்புப் படைகளின் பிரதான பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

எனினும், எந்தவிதமான ஆபத்தோ அல்லது பீதியடையவோ தேவையில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க விரும்புவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான எந்தவொரு தகவலும், முழுமையாக ஆராயப்பட்டு, முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிப்படுத்தப்படும் என்பதால், இப்போதைக்கு வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கையர்கள் 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts