இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும வர் கூறுகிறார்.
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற அனைவரும் இல்லையென்றாலும், அநேகர் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.
இதனிடையே, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதக் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் இலங்கைப் பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொஹமட் மூஹ்சின் ஷர்ஹாஸ் நிலாம் என்ற முப்பத்தேழு வயது இலங்கையர், சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் இருந்தபோது, விமானத் தாக்குதலில் பலியானதாக கடந்த ஆண்டு ஜூலையில் செய்திகள் வெளியாயின.
குருநாகல் மாவட்டத்தில் சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக இருந்த அவர் அவரது குடும்பத்துடன் 2014 ம் ஆண்டு டிசம்பரில் துருக்கி வழியாக சிரியாவுக்கு சென்றிருந்ததாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.