ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவினர், நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர்.
அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அவர்கள், அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அங்கு மேற்கொள்ளப்படும் வீடமைப்பு, மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று கேட்டறிந்துள்ளனர்.
மாவட்டத்தின் தேவைகள் குறித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 17,350 வீடுகள் தேவைப்படுவதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , அக்குழுவினரிடம் எடுத்துக் கூறினார்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுத் தர உதவுமாறும், அரசாங்க அதிபர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.