“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.” இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் பீரிஸ் மேலும் கூறியவை வருமாறு:-
“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற வழக்கில் இலங்கை பிரதிவாதியல்ல. ஏனைய 28 நாடுகள்தான் பிரதிவாதிகளாக உள்ளன. புலிகள்தான் இந்த வழக்கைத் தாக்கல்செய்திருந்தனர். எனவே, இந்த வழக்கில் இலங்கையும் ஒரு பிரதிவாதியாக இணையவேண்டிவரும். அதற்காக நாம் ஒரு கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு முன் வைக்கவேண்டும். அதன்பின்பே எமது வாதங்கள், ஆதாரங்களை முன் வைக்கலாம்.
ஆனால், வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றின் முன்பாக எமது நாட்டை அடிபணியவைக்க நாம் தயாரில்லை. எமது நாட்டின் இறைமை, சுயவிருப்பம், கெளரவத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் முன்பாக அடிபணிய வைக்கமாட் டோம். அவ்வாறு நாம் செய்வோமாக இருந்தால் அது எமது நாட்டுக்குப் பெரும் பாதகமாக அமைந்துவிடும்.
இந்த வழக்கில் நாம் ஒரு தரப்பாக இல்லாவிட்டாலும் இதில் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டுள்ள 28 நாடுகளின் தூதுவர்களையும் இலங்கையில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” – என்றார்.