வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது.
இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல் போனவர்களின் உறவுகளினால் அனுப்பிய கடிதம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
“ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தவிர்த்தல்” என்ற நமது தொடரின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று இந்த உலகத்தில், 5 ஆண்டுகளாக, 1833 நாட்களாக இந்தப் போராட்டத்தை தெரு வீதியில் கொட்டகை அமைத்து நாம் மட்டும்தான் தொடர்கிறோம்.
ஐ.சி.சி மற்றும் பொதுவாக்கெடுப்பு ஆகிய இரண்டு விஷயங்களில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகுக்கு காட்ட, எங்களைப் போல் இரவு பகலாக தெரு வீதியில் கொட்டகை அமைத்து போராடுவதற்கு, கிளிநொச்சி மற்றும் பிற இடங்களில் உள்ள மற்ற தாய்மார்களையும் ஊக்கிவிக்கிறோம் .
இந்த முக்கியமான நாளில், எங்களுக்கு உதவிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எமது தமிழ் மக்களின் உதவியின்றி நாம் இந்தப் போராட்டத்தை தொடர்ந்திருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.