ஐந்து தசாப்த கால பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் பேசுகிறோம்!

இலங்கையில் ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இன, மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம். – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த தசாப்தத்தில் மதப் பிரச்சினையும் உருவெடுத்தது. புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன எமது அரசியல் நோக்கங்களின் பிரதானமானவையாகக் காணப்படுகின்றன.

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகளைத் தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகவும் பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்வு காணப்படும். அனைத்து மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையிலான கொள்கை ஒன்றை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அனைவரது பங்களிப்புடனும் மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

ஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்துசெல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம்.

இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிறுவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமர் ஒருவர் ஜப்பான் நாட்டின் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு பெருமைக்குரிய விடயமாகும். ஜப்பான் பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட ஒரு சில தலைவர்களே விசேட உரை நிகழ்த்தியுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையின் பிரதமர் ஜப்பான் நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தியுள்ள நிலையில் அவர் அந்த உரையில் என்னென்ன விடயங்களை முன்வைத்துள்ளார் என்பதை ஆராய்வது பொருத்தமாக இருக்கும். விசேடமாக, இலங்கையில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், புதிய அரசியலமைப்பு, உண்மையைக் கண்டறியும் செயற்பாடுகள், ஜனநாயகத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

அதாவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகவும் சகலரும் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் இலங்கையின் அடையாளத்துடன் பிரச்சினைக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தற்போது தேசிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அந்த தேசிய அரசாங்கத்தில் பிரதான அங்கத்தை வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் வெளிநாடொன்றின் பாராளுமன்றத்தில் மிகவும் ஆழமான ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புடன் கூடிய உறுதிமொழி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறலாம். யுத்தம் முடிந்த பின்னர் கடந்த ஆறு வருடங்களில் அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகளும் முயற்சிகளும் தோல்வியையே சந்தித்து வந்தன. குறிப்பாக, முன்னைய அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நேர்மையான நோக்கம் இருக்கவில்லையென்றே கருதப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையிலேயே புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது.

அந்த புதிய அரசாங்கத்தின் பிரதானியும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய அக்கறையை செலுத்தியுள்ளமையும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதும் தீர்வு விடயத்தில் ஆக்கபூர்வமான மற்றும் ஆரோக்கியமான சமிக்ஞையை வெளிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரையிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வைக் காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக இருந்தபோது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசியல் தீர்வைக் காண்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்போதைய அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்பிற்குமிடையில் ஆறு சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் நடைபெற்றன.

எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. எனவே அவ்வாறானதொரு தலைவர் தற்போது நாட்டின் பிரதமராக இருப்பதும் இவ்வாறு தொடர்ந்து அரசியல் தீர்வுக்காக குரல் கொடுப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் பாராட்டப்படவேண்டிய முயற்சியுமாகும்.

Related Posts