இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை அடுத்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவி பிள்ளை நேற்று அறிவித்ததை அடுத்தே மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இதனிடையே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு தாம் தாங்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலங்களுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்க அறிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்கா கொண்டுவந்த ஒரு தீர்மானம், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அந்த விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை நேற்று அந்த அணையத்தின் 26 ஆவது அமர்வை தொடங்கிவைத்து உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும், தீவிரவாதம் மற்றும் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை என்று நவி பிள்ளை தனது உரையில் தெரிவித்தார்.
‘மனித உரிமைகள் மீறல்கள்’ குறித்து விசாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நவி பிள்ளை அறிவித்த பிறகு, அப்படியான எந்த விசாரணைகளுக்கும் இலங்கை ஒத்துழைக்காது என்று, ஜெனீவாவிலுள்ள ஐநா அமைப்புகளுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் இணக்கப்பாடு, பொறுப்புக் கூறுதல், தேசத்தை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், இலங்கை மக்களின் நலன் குறித்து உண்மையாக ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், பன்னாட்டு அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து தாங்கள் செயல்பட்டு வருவதாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று இலங்கைத் தூதரின் அறிக்கை கூறுகிறது.
நவி பிள்ளை அவர்களின் முன்னெடுப்பு சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, தொடர்ச்சியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ள அவர், அந்தத் தீர்மானம் தெளிவில்லாமல் இருப்பதால், அது அபாயகரமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தூதர் கூறுகிறார்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரது முன்னெடுப்பு, காழ்ப்புணர்ச்சி மிக்கது, நாட்டில் உருவாக்கப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாடு குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் ரவிநாத ஆரியசின்காவின் அறிக்கை கூறுகிறது. ஆனால் சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையின் மூலமே உண்மைகள் தெரியவரும் என நவிப் பிள்ளை தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.