ஐங்கரநேசனுக்குரிய மாகாண நிதியில் இரண்டு குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பரிந்துரைக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்நிதிக்கு மேதிகமாக, இந்த ஆண்டு பின்தங்கிய மற்றும் தனித்து விடப்பட்ட கிராமங்களுக்கான நிதி ஒதுக்கீடாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொ. ஐங்கரநேசன் தனக்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்ட இந்த இரண்டு மில்லியன் ரூபாவையும் போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு வீடற்ற குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா என்று பகிர்ந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.

வலிமேற்கு மற்றும் நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரு குடும்பங்களில் நல்லூரைச் சேர்ந்த குடும்பத்துக்குரிய வீட்டுக்கான அடிக்கல்லை இன்று திங்கட்கிழமை (11.09.2017) பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார்.

அடிக்கல் நாட்டும் இந்நிகழ்ச்சியில் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜனும் கலந்து கொண்டிருந்தார். வீட்டின் கட்டுமானப் பணிகள் உள்ராட்சித் திணைக்களத்தின் ஊடாகவே மேற்பார்வை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts