தமிழ் மக்களின் ஐக்கியத்துடன் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் என்பவற்றை கட்டியமைக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாடு ‘வலுவான ஐக்கியத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமையிலிருந்து (19) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவருகின்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். இன்று அவர்கள் சிறுபான்மையினராக ஒடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களை ஒடுக்கின்ற செயற்பாடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை இனத்தவருடன் சேர்ந்திருந்தால், பிரச்சினை இல்லையென்று பெருன்பான்மையினருடன் இணைந்திருந்தனர். ஆனால், இப்பொழுது சேர்ந்திருந்தவர்களும் பெரும்பான்மையினரால் ஒடுக்கப்படுகின்றனர்.
எனவே, நாங்கள் ஒருமித்து முன்னேறவேண்டிய சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எமது பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஜ.நா. விசாரணைக்கான ஆவணங்களை நாம் மிக வேகமாக சேகரிக்க வேண்டும்! – மாவை
சுகபோகங்களுக்காக அரசுடன் ஒட்டியிருக்கின்றது முஸ்லிம் தலைமை! – சம்பந்தன்