இராக்கில், இஸ்லாமிய அரசினை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள இயக்கமும் அதன் கூட்டாளிகளும் மோசமான, பரவலான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.
ஐஎஸ் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரக்கமற்ற விதத்தில், இன மற்றும் மதக் குழுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் நடந்துவருவதாக ஓய்வுபெற்று செல்லும் நவி பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோசூல் சிறையிலிருந்து ஜூன் மாதம் கொண்டுசெல்லப்பட்ட கைதிகள் 670 பேரின் படுகொலைகள் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சன்னி முஸ்லிம் அல்லாதவர்கள் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும் நவி பிள்ளைக் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.