அச்சுவேலிப் பிரதேசத்தில் ஏ.ரி.எம். அட்டைகளில் பண மோசடியில் ஈடுபட்ட கோப்பாய் பகுதி இளைஞனை அச்சுவேலி குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 2 ஏ.ரி.எம் அட்டைகளின் இரகசிய இலக்கங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் அட்டைகளுடன் இரகசிய இலக்கங்களையும் குறித்து வைத்துள்ளார்.
இந்நபர் உணவகம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் இவர் தனது ஏ.ரி.எம். அட்டைகள் தவறவிட்டதாகவும் பின்னர் வங்கிப் புத்தகத்தைப் பரீட்சித்துப் பார்த்தபோது 54 ஆயிரம் ரூபா பணம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியுற்ற குறித்த நபர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அடுத்து பொலிஸ் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர்.
இவரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் தான் ஒருநாள் கடையினைத் துப்புரவு செய்யும் போது ஏ.ரி.எம். அட்டைகள் கிடைத்ததாகவும், அதில் இருந்த இரகசிய இலக்கத்தைக் கொண்டு பணத்தை எடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து குறித்த நபரைப் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை நீதிபதி எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.