Ad Widget

ஏ.ரி.எம். இயந்திரங்களில் தகவல்கள் திருடிய சீனா பிரஜைகள் கைது

வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளது.

அதனையடுத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள், விசாரணைகளை முன்னெடுத்த போது, கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள குறித்த வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட அனவசிய இலத்திரனியல் உபகரணம் குறித்த வங்கி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து, கொழும்பு 6 இல் அமைந்துள்ள இயந்திரத்திலும் இவ்வாறு மேலதிக இலத்திரனியல் பாகம் பொறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து, ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள வீடியோ கமெராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்த போது, மேலதிக உபகரணத்தை பெறுத்திய சீன நாட்டவர் அடையாளம் காணப்பட்டார்.

அதனையடுத்து, வெள்ளவத்தை பகுதியில் இருந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட உபகரணங்களை கழற்றிச் செல்ல வந்த சீன பிரஜைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த நபர்களிடமிருந்து, தகவல்களை திருட பயன்படுத்திய உபகரணங்கள் வெளிநாட்டு, உள்நாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts