கனடாவில் உள்ள ரோரண்டோவில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஐடியல் குழுமம், ‘ஐடியல் எண்டர்டெயின்மெண்ட்’ எனும் புதிய நிறுவனத்தை துவங்கவுள்ளது. படம் மற்றும் இசை விநியோகமும், படத்தயாரிப்பும் மேற்கொள்ளவுள்ள இந்நிறுவனத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் ரோரண்டோவில் துவக்கி வைத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் லீ மஸ்க் (‘Le musk’) திரைப்படத்தையும், ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தற்போது விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’99 Songs’ திரைப்படத்தையும் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தைப் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூறுகையில், “ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புகிறேன். எனது திட்டங்கள், எண்ணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு அர எவ்வாறு கடினமாக உழைத்தார்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் நான். எனவே எனது கடின உழைப்பின் மதிப்பை அவர்களும் புரிந்து பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்றார்.
ஐடியல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜி நாடா கூறுகையில், “இன்றைய உலகில் நேயர்கள் புதிய படைப்புகளுக்கான வேட்கை மிக்கவர்கள். ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் இத்தகைய படைப்பில் முன்னிலை வகிக்க விரும்புகிறது, இதற்காக, எல்லைகளை விஸ்தரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார்.