மணிரத்னத்தின் அடுத்தப் படம் பற்றிய செய்திகளே கடந்த சில நாட்களாக அதிகம் தென்படுகின்றன. மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ என்று தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
பின்னர் பாசிலின் மகனும் அண்மையில் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டவருமான மலையாள நடிகர் ஃபகத் பாசில் பெயர் அடிபட்டது. பிறகு அவரும் இல்லை என்றாகி, சமீபநாட்களாக மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் பெயர் அடிபட்டு வருகிறது. அது மட்டுமல்ல, அலைபாயுதே படம் போல் இளமையான காதல் கதையை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? தன்னுடைய அடுத்தப்படமாக மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார். நேரம், ட்ராபிக், த மெட்ரோ, பெங்களூர் டேஸ் என மலையாளத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருபவர் இவர்.
மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைக்க இருக்கிறார் மணிரத்னம். இந்தப்படத்தை ஹிந்தியிலும் நேரடிப்படமாக வெளியிட இருக்கிறார்.
அதனால்தான், கதாநாயகியாக அலியாபட் என்ற பாலிவுட் நடிகையை தேர்வு செய்து இருக்கிறாராம். மௌனராகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராமையே தற்போது எடுக்க உள்ள படத்துக்கும் ஒளிப்பதிவாளராக கமிட் பண்ணி உள்ளார் மணிரத்னம்.
மௌனராகம் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட அம்சம்…இளையராஜாவின் இசை. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இருந்தால்தான் மௌனராகம் படத்தை பெரிய அளவில் பிசனஸ் பண்ண முடியம் என்பதால் இளையராஜா தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் மணிரத்னம்.