ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார்.
ரகுமானின் தங்கை மகனான இ.ஆர்.அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியூசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க, பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார்.
இந்த மியூசிக் வீடியோவை அஷ்வின் இயக்கியுள்ளார். இன்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ள ‘பிக் தமிழ் மெலோடி அவார்ட்ஸ்’ விருது வழங்கும் விழாவில் இந்த மியூசிக் வீடியோவை வெளியிடவுள்ளனர்.
இது குறித்து காஷிஃப் கூறும்போது, “சிறு வயது முதலே எனக்கு இசை மீது தீவிர பற்று இருந்தது. ரஹ்மான் அங்கிள் ஸ்டுடியோவிற்கு சென்று அவர் வேலை செய்வதை உன்னிப்பாய் கவனிப்பதுண்டு.
இந்த மியூசிக் வீடியோ எனது நெடுநாள் கனவு. ரஹ்மான் அங்கிள் மற்றும் எனது சகோதரன் ஜி.வி.பிரகாஷ் இருவரும் என்னை வாழ்த்தினர். உங்கள் அனைவருக்கும் எனது முதல் பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.