வடக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் கடமையாற்றிய அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.
தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஒரே பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் கல்விக் கோட்டம் மற்றும் கல்வி வலய மட்டத்தில் உள்வாரியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புக்கு அமைய வலயக் கல்வி அலுவலகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் முதலாம் தவணையில் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளன.
தொடர்ச்சியாக நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கடமை புரிவதால் ஏற்படக்கூடிய இயல்புகள் ஏனைய பாடசாலைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலை ரீதியிலான சேவை விபரங்கள் மற்றும் தகவல்கள் என்பன வலயக் கல்வி அலுவலகங்களில் கணினி மயப்படுத்தப்பட்டு நிரல் படுத்தப்பட்டிருப்பதால் உரிய தகவல்களின் அடிப்படையில் இடமாற்ற நடைமுறைகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.