ஏழு துறைகளில் பெரும் அபிவிருத்தி இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா முன்வந்தது

தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளில் பெரும் அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா என்ற நிறுவனம் ஜனாதிபதியிடம் அனுமதியைப் பெற்றுள்ளது என்று நிறுவனத் தலைவர் வா.இராசையா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தீவகம் தெற்குப் பகுதியில் உல்லாசத்துறை, கைத்தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகளில் முன்னிறுத்தி இந்தக் கலப்பு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு இது தொடர்பாக விரிவான எண்ணக்கரு பத்திரம் வழங்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

தீவகம் தெற்கு கடலை மையமாக வைத்து முன்னெடுக்கும் பெரிய அபிவிருத்தி திட்டத்துக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்வரும் கரையோரம் பேணல் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் 5 ஆண்டுகளை மையமாக வைத்து இந்தத் திட்டம் நகர்த்தப்படவுள்ளது.

தீவக, யாழ். கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அடுத்த ஜனவரியில் முன்னெடுக்கப்படும். இதேவேளை, இந்தோனேஷிய உட்கட்டுமான நிபுணர்களின் ஆலோசனை பெறப்படவுள்ளது. என்றார்.

இதன் முதற்கட்டமாக பி.ரி.பனோறோமா நிறுவனத் தலைவர் வா.இராசையா தலைமையிலான ஜப்பான் குழு உல்லாசத்துறை, கைத்தொழில் துறை, வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி, விவசாயம், மீன்பிடித் துறை தொடர்பாக யாழ்.ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. கடல்வளம் சார்ந்த துறைகளையும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.கலப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, முதலீட்டு சபை தலைவர், மத்திய சுற்றாடல் அமைச்சு ஆகியோரின் விசேட கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts