கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஊடகங்கள் அனைத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது, நிர்பயாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான்.
காரணம் இந்த ஆவணப்படத்தில் பேட்டி அளித்த குற்றவாளியின் திமிர்த்தனமான பேச்சு. பிபிசி சார்பாக பெண் இயக்குநர் லெஸ்லி உட்வின் என்பவர் ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆவணப்படத்திற்காக திகார் ஜெயிலிற்குச் சென்று 6 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்துள்ளார். இதன் போது தான், ”கற்பழிக்கப்படும் போது அமைதியாக இருக்க வேண்டும், திரும்பித் தாக்கவோ, போராடவோ கூடாது” என்று, சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் முகேஷ் சிங்.
இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரைச் சென்றுள்ளது. இப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்ததுடன், எப்படி திகார் சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை பேட்டி எடுக்க அனுமதித்தனர் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் இருக்கின்றனர்.
இந்நிலையில், வரும் 8ம் தேதி(மகளிர் தினம்) அன்று வெளியாவதாக இருந்த இந்தப்படத்தை, இந்தியா தடை விதித்துள்ள போதும், அதிகாலை 3.30 மணியளவில் பி.பி.சி. ஒளிபரப்பியது.
இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் வெளியான இந்த ஆவணப்படம், நிர்பயா குடும்பத்தினரின் சம்மதத்தை அடுத்தே வெளியிடப்பட்டதாக பிபிசி கூறுகிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏன் இந்த ஆவணப்படத்தை எடுத்தார் என்ற கேள்விக்கு லெஸ்லி உட்வின் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் கூறியதாவது:
பாலின பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் எனது நோக்கம். இந்த பலாத்கார சம்பவத்துக்கு எதிராக இந்திய மக்கள் ரோட்டில் வந்து போராட்டம் நடத்தியது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் நானே பலாத்காரம் செய்யப்பட்டவள்தான். இதில் எனக்கொன்றும் வெட்கம் இல்லை.
வெட்கப்பட வேண்டியது பலாத்காரம் செய்தவர்கள்தான். பலாத்கார குற்றவாளிகள் பலாத்கார குற்றவாளிகளை நான் ஏன் சந்தித்து பேட்டி எடுத்தேன் என கேட்கிறீர்கள். ஆண்கள் ஏன் பலாத்காரம் செய்கிறார்கள்? இது ஏன் நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பதிலை பெற எனக்கு வழி தெரிந்தது.
அதை குற்றவாளிகளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது. விடை தெரியவேண்டும் அவர்களுடன் உட்கார்ந்து, பெண்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எது பெண்களை மோசமானதாக காட்டுகிறது? என நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது.
அவர்களின் மனநிலை நான் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர்களை நான் சந்திக்காமல் இருந்திருந்தால், பலாத்காரம் நடப்பது ஏன் என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைத்திருக்காது. ஆண்கள்தான் பொறுப்பு பலாத்காரம் என்ற நோய்க்கு காரணம் பலாத்காரம் செய்தவர்கள் அல்ல. சமூகம்தான்.
பெண்களை ஒரு பொருட்டாக ஆண்கள் மதிக்காததை ஊக்குவிக்கும் சமூகம்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதை முதலில் இந்தியாவில் இப்படத்தைக் காட்ட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.
இந்த குறும்படத்தை எடுக்க கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறை டைரக்டர் ஜெனரலிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தேன். அவர் மத்திய உள்துறை அமைச்சக்கத்துடன் கலந்து ஆலோசித்து 2 வாரங்களில் அனுமதி அளித்தார். படத்தை ஒளிபரப்ப சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன்.
இதற்கிடையில், படத்தின் இயக்குநர் லெஸ்ஸி தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் இந்தியாவிலிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.