ஏகமனதாக ஏற்கப்பட்டது சாவகச்சேரி நகரசபை பட்ஜெட்

சாவகச்சேரி நகரசபையின் அடுத்த வருடத்துக்கான உத்தேச வரவுசெலவுத் திட்டம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
நகரசபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது:

சபை பொறுப்பேற்ற பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு செலவுத் திட்ட உத்தேச மதிப்பீடு இதுவாகும்.

கடந்த வருடம் சமர்ப் பிக்கப்பட்ட இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவரிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைகளும் உப தலைவர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் செய்து முடிக்கப்பட்டன.

அடுத்த வருட வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு அபிவிருத்தி வேலைகளுடன் நகரசபை மக்களுக்கு வழங்க வேண்டிய தேவைகள் தொடர்பாக அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பின் பிரகாரம் உத்தேச வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. என்றார்.

அடுத்த வருடத்துக்கான உத்தேச மொத்த வருமான மான 14 கோடியே 28 லட்சத்து 65 ஆயிரம் ரூபாவும் உத்தேச மொத்த செலவினமாக 14 கோடியே 28 லட்சத்து 45 ஆயிரம் ரூபாவும் மதிப்பிடப்பட்டு மிகையாக 20 ஆயிரம் ரூபா உள்ளது.

அபிவிருத்தி வேலைகளுக்காக சபை உறுப்பினர்களால் வழங்கப்பட்ட 23 வீதிகளும் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் 7 வேலைகளும் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவை மேம்பாட்டுத் திட்டத்தில் ஐந்து வீதிகளும் அரச நன் கொடையில் ஒரு வேலையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

2013ஆம் ஆண் டுக்குரிய உத்தேச வரவு, செலவுத் திட்டத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts