கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘நூற்றாண்டின் சாதனையாளர்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
அதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது கூறியதாவது:-
இந்த விருதை எனது தாயாருக்கும், நாம் எல்லோரும் இங்கே பாதுகாப்பாக இருப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருது எல்லையில் உள்ள அனைவருக்கும் சொந்தம். இதை உங்களுக்கு பெருமிதத்துடன் பணிவான முறையில் சமர்ப்பிக்கிறேன்.
இன்றும் திரைப்படத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது பெற்றோர், என்னை அறிமுகம் செய்த குரு, பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது பாடல்களை அன்று ரசித்தவர்கள் இன்றும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.