வடக்கு, கிழக்கு தமிழர்களிடத்திலோ அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடத்திலோ தனிநாட்டுக் கோரிக்கை கிடையாது. நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கூறவில்லை. எனினும், தீர்வு விடயத்தில் ஸ்கொட்லாந்து மக்களின் மனங்களை அறிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பைப் போன்று இலங்கையிலே தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை – அவர்களின் மனங்களை அறிந்துகொள்வதற்கு பொது வாக்கெடுப்பொன்றை நடத்த அரசுக்குத் திராணி இருக்கின்றதா?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி கூறுவது போன்று நாம் வைக்கோல் பட்டறை நாய்களாக இருந்துதான் எமது மக்களைக் காத்து வருகின்றோம். ஆனால், வைக்கோல் பட்டறையை இரும்புப் பட்டறைகளாக மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்த சிறிதரன் எம்.பி.,சிங்கள மக்களால் புரிந்துகொள்ளப்பட்டுள்ள தமிழர் பிரச்சினைகளை சிங்களத் தலைவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் 2015ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறிதரன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமக்கு நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான சமாதானத்தையும் அரசியல் தீர்வு ஒன்றிணையுமே விரும்புகின்றனர். அறவழிப் போராட்டங்கள் மறுக்கப்பட்டதனாலேயே ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. கடந்த காலங்களில் ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தாலும் இப்போது நிலைமை மாறியுள்ளது.
தமிழ் மக்கள் தரப்பு கோரிக்கை என்ன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாக எடுத்துக்கூறி விட்டது. தற்போது தமிழ் மக்களிடத்தில் தனி நாட்டுக் கோரிக்கை கிடையாது. புலம்பெயர் தமிழர்களிடத்தில் ஈழக் கோரிக்கையும் இல்லை. நாம் எதிர்பார்ப்பது எமக்கான தீர்வை மட்டுமே ஆகும் – என்றார்.