எழுச்சி பெறும் மாணவர் போராட்டம்! கொந்தளிக்கும் தமிழகம்!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் போராட்டம் வரலாறு காணாத வகையில் எழுச்சி பெற்றுள்ளது.

இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சென்னை மெரினாவில் தொடங்கிய சிறு போராட்டம் அலங்காநல்லூரில் பரவி தற்போது மீண்டும் சென்னை மூலமாகவே விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பீட்டா அமைப்பை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும், உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்தது மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் தேவை என்று மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டு மாடு இனங்களை அழித்து கலப்பின மாடுகளை கொண்டுவர பீட்டா அமைப்பு செய்யும் சூழ்ச்சி தான் ஜல்லிக்கட்டு தடை என்று குறிப்பிடும் மாணவர்கள், அவர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்றும் தீர்க்கமாக கூறியிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல லட்சம் பேர் இரவு, பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எல்லா மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்ட நிலையில் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனையடுத்து போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள நிலையில் அவரின் அறிக்கையை தொடர்ந்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts