‘எழுக தமிழ்’ முற்றவெளியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்பட்டன

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி வடக்கு கிழக்கில் இருந்து திரண்டு வந்து இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கு பற்றுதலுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றல் ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன. வட மாகாண முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு பேரணிகளும் திரண்டு முற்றவெளி மைதானத்தை புடை சூழ்ந்தன.

இதனை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் பொது கூட்டம் நடாத்தப்பட்டது. இதன் போது, முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளிகள் பொது சுடர் ஏற்றியதுடன் தமிழ் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தினார். மேலும், வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றியிருந்தார்கள்.

குறித்த பேரணியின் போது, “தேச துரோகியே வெளியேறு”, “சிங்கள இராணுவமே வெளியேறு”, போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் நேற்றய தினம் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டி இருந்தது இதனால் வட மாகாணத்தின் பல பிரதேசங்களில் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவைகள், பொதுச் சந்தைகள் போன்றன தமது ஒத்துழைப்பை வழங்கியமையால் நேற்று காலை முதல் யாழ் நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டதுடன் வைத்தியசாலை வங்கிகள் போன்றவற்றின் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு இருந்தன.

இதேவேளை, நேற்று காலை பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டிருந்த கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தும் பாணியிலான கோரிக்கைகள் சில பகுதிகளில் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் சுயாதின தரப்புக்களினால் குறித்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறான போதிலும் நேற்றய எழுக தமிழ் பேரணி வெற்றி பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

eluga-tamil-6

eluga-tamil-5

eluga-tamil-4

eluga-tamil-3

eluga-tamil-2

eluga-tamil-1

Related Posts