தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யா விட்டால் அனைத்தும் தவறாகி விடும். மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக் கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாக விருக்கின்றோம். தமிழ் மக்கள் விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம் பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது.
ஒரு ஜனநாயக முறையில் நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதிகளில் உள்ள விடயங்களைக் கையாளக்கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி பெரும் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவை யின் ஏற்பாட்டிலான இப்பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது பலமான எண்ணமாக உள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் தெளிவுபடுத்திக் கூறியுள்ளேன். எனவே இப்படியான அழுத்தங்கள் கொடுப்பதன்மூலம்தான் அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும். தமிழ் மக்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும் என்றார்.