‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல

“‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.

சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதையே தமிழ் மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் உரிமை, பங்கு பற்றுவதும் பங்குபற்றாமல் இருப்பதும் எமது உரிமை. நான் போராட்டத்துக்கு எதிரானவனல்ல, ஆனால் போராட்டத்தில் பங்குபற்றவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கை புதிதானதல்ல. அத்தனை கோரிக்கைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அதில் உள்ள கூட்டமைப்பினர் என சொல்லிக்கொள்பவர்களும் காலம் காலமாகச் சொல்லிக்கொண்ட பிரேரணைகள், தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாதிக்காது.

‘எழுக பேரணி’ தொடர்பில், யாழுக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி நீக்லஸ் பேர்னாட், இன்று (நேற்று) என்னைச் சந்தித்த போது என்னிடம் வினவினார்.

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நேரம் கழித்து தெரிவிக்கலாம் என நினைத்தோம். ஆனால், தமிழ் மக்கள் பேரவையினர் முற்கூட்டியே தெரிவித்துவிட்டார்கள். 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வினை எதிர்பார்த்து காலம் தாழ்த்தி கூற நினைத்தோம். அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு விட்டார்கள். எழுக பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. ஆனால் தமிழரசு கட்சியினை தாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களுக்கு தெரியாத விடயமும் அல்ல. தமிழரசுக் கட்சிக்கு தெரியாததும் அல்ல. தமிழரசு கட்சியின் உறவினர்களும், நல்லெண்ணம் உடையவர்களும் தான் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்றார்கள். அதில் உள்ள யாரும் தமிழரசுக் கட்சிக்கு எதிரிகள் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார்.

Related Posts