மக்களது எழுச்சியை தென்பகுதியிலே வேறு விதமாக சித்தரிப்பவர்களும் இருக்கின்றார்கள். தற்போதும் அவர்கள் தென்பகுதியிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன போன்ற பிரசாரங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் செயற்பாடுகள் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வடக்கில் மக்களைத் திரட்டி அரசிற்கு எதிராக எழுச்சியைஏற்படுத்த முனைவதானது இப்படியான நிகழ்வுகளை காண்பித்து பிரசாரம் செய்வதற்கு அவர்களுக்கு கருவியாக அமைந்துவிடலாம். இத்தகைய செயற்பாடு, உருவாகவுள்ள அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியாகவும் அமையலாம் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எனினும் அதற்காக மக்கள் எழுச்சி மேற்கொள்ளக்கூடாதென்று நான் கூற வரவில்லை. மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வானது கிடைத்துவிடக் கூடாது என்று செயற்படுபவர்களின் கருவியாக மக்களும் அவர்களது எழுச்சிகளும் பயன்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கிய விடயமாகும். எனவே இச் சந்தர்ப்பத்தை சரியான முறையிலே கையாளாதுவிட்டால் நாம் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
காணிவிடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் தாமதமாக செயற்படுவது தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதுடன் எமக்கும் அதில் அதிருப்தி உள்ளது. இதனை நாம் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் விழிப்படையச் செய்கின்றபோது வேறு நிகழ்ச்சிநிரலில் இயங்குகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். விசேடமாக அரசியல் தீர்வு ஏற்படக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுபவர்களும் தமிழர் தரப்பிலே இருக்கின்றார்கள்.
மக்களது எழுச்சியை தென்பகுதியிலே வேறு விதமாக சித்தரிப்பவர்களும் இருக்கின்றார்கள். தற்போதும் அவர்கள் தென்பகுதியிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன போன்ற பிரசாரங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் செயற்பாடுகள் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இப்படியான நிகழ்வுகளை காண்பித்து பிரசாரம் செய்வதற்கு அவர்களுக்கு கருவியாக அமைந்துவிடலாம். இத்தகைய செயற்பாடு, உருவாகவுள்ள அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியாகவும் அமையலாம். எனினும் அதற்காக மக்கள் எழுச்சி மேற்கொள்ளக்கூடாதென்று நான் கூற வரவில்லை. மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வானது கிடைத்துவிடக் கூடாது என்று செயற்படுபவர்களின் கருவியாக மக்களும் அவர்களது எழுச்சிகளும் பயன்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கிய விடயமாகும்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது சரியான செய்தியையே மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையிலே அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததன்படி புதிய அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக பல வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் இவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து விட்டன என நான் கூறவில்லை. எனினும் அத்தகைய முழுமைத்தன்மையை செய்ய முடியாது என்றும் நான் கூறவரவில்லை. ஆனால் வெற்றிகரமாக முடிவதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. எனவே இச் சந்தர்ப்பத்தை சரியான முறையிலே கையாளாதுவிட்டால் நாம் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும் எனத் தெரிவித்தார்.