தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய இளைஞரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்தமைக்கான ஆதாரங்களைக்கூட அவர்கள் வழங்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இது குறித்து கட்சி உறுப்பினர்கள் எமது தளத்துக்கு தகவல் தருகையில் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் கட்சியினருடன் இணைந்து செயற்பட்ட அலெக்ஸ் ஒரு தீவிர அரசியல், சமூக செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.

போரினால் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரத்தை இழந்த, அடிநிலை மக்களுக்காக களத்தில் நின்று உறுதியுடன் பணியாற்றுபவர்.தேசியமும், சமூக மாற்றமும் என்கிற சிந்தனையின் பால் மிக உறுதியாக நிற்பவர்.
தமிழ்த் தேசிய அரசியலின்பால் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கரிசனம் உடையவர். இவ்வாண்டு பேரெழுச்சியுடன் இடம்பெற்ற எழுகத்தமிழ் நிகழ்வை திறம்பட நடாத்துவதற்கு கடுமையாக உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.
எந்தவொரு சமூக அரசியல் செயற்பாடாக இருந்தாலும் தூக்கத்தை மறந்து தன் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றும் வல்லமை பொருந்தியவர். என்று கூறினர்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ஒரு கட்சியின் அலுவலகத்துக்குள் இருந்து அக் கட்சித் தலைவரின் அனுமதி இல்லாமல் ஒரு திருடனை பிடிப்பது போல் பிடிப்பதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது
ஆவா குழுவை யாழில் உருவாக்கியது இராணுவ உயரதிகாரி ஒருவர் என்பதனை அமைச்சரவை பேச்சாளரே பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், குறித்த இராணுவ உயரதிகாரியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தாமல், வெறும் காழ்ப்புணர்வு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
ஆவா என்கிற சமூக விரோதக் குழுவுடன் தேவையில்லாமல் ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு முடிச்சுப் போடுவதன் மூலம் சர்வதேச அரங்கில் ஏதோவொன்றை அரசு நிலைநிறுத்த முயல்வதாக தெரிகிறது.
முதலில் குறித்த இராணுவ உயரதிகாரியை கைது செய்யுங்கள், பின்னர் அதன் முக்கிய புள்ளிகளை கைது செய்யுங்கள், இதனை தற்போது இயக்குபவர்களை கைது செய்யுங்கள். அதனை விடுத்து இவ்வாறு கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக அவர்களை நீதிமன்றில் முறபடுத்தாமல் தடுத்துவைப்பதன் மூலம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தனர்.
கடைசியாக அலெக்ஸ்சை பார்த்த நண்பர் ஒருவர் எமது தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில், அலெக்சை ஒரு செயற்பாட்டாளனாகவே எனக்குத் தெரியும். கடந்த வாரம் புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வந்திருந்த உறவு ஒருவர் வறுமையான ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கி கொடுத்திருந்தார். அதனை அலெக்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொப்பிகள், பேனை, கொம்பாஸ் என்று தனித்தனிப் பைகளில் பொதியிட்டு குறித்த மாணவர்களிடம் வழங்கும் பணியை மத்தியானச் சாப்பாட்டையும் மறந்து செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறுகிறார்.