எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லையென இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நேற்று(19) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சின்னத்துரை சசிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக இருக்கும் அனந்தி சசிதரன் உட்பட ஆறுபேர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர்.
இவ்வழக்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதேவேளை குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்த நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிராளி சார்பில், புனர்வாழ்க்கு உட்படுத்தப்பட்டோர் தொடர்பிலான ஆவணங்களின்படி எழிலனுடைய பெயர் தமது பெயர்ப்பட்டியலில் இல்லை எனவும் எனவே அவர் இராணுவத்திடம் சரணடைவில்லை என்ற கருத்துப்பட பதிலளிக்கப்பட்டதாக குறித்த வழக்கை விசாரித்த சட்டத்தரணி க.ரத்னவேல் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வைத்து இராணுவத்திடம் தனது கணவனை ஒப்படைத்தாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ள எழிலனின் மனைவியான வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், தொடர்ந்தும் நீதி கோரிய தனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.