Ad Widget

இராணுவத்தினரின் நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார்!

vicknewaran-tnaயாழ். இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள எல்லேப் போட்டிகள் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

மேற்படி எல்லேப் போட்டிகள் இன்று சனிக்கிழமை (05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி வடமாகாண முதலமைச்சருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்நிகழ்வில் தான் கலந்துகொள்ளவில்லையென முதலமைச்சர் தெரிவித்ததாக ஐங்கரநேசன் தெரிவித்தார்.

‘நாங்கள் தனிநபராக தனிப்பட்டவர்களாக எந்தவொரு இராணுவத்தினருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவம் அதிலிருந்து வெளியேறும் வரைக்கும் தமிழர் நிலங்களில் இருந்து வெளியேறுமாறு சொல்லிக் கொண்டிருப்போம் என முதலமைச்சர் கூறியதாக ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி எல்லேப் போட்டிகளில் யாழ்ப்பாணம், தெற்கு, பொலிஸ் முப்படைகள் உள்ளடங்கலாக 31 அணிகள் பங்குபற்றுவதுடன் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பலாலி இராணுவ மைதானம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்தி

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

Related Posts