எல்லேயில் இராணுவ அணிகள் சம்பியன்

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின.

மேற்படி சுற்றுப்போட்டிகளில் யாழ்ப்பாணம், தெற்கு, முப்படைகள், மற்றும் பொலிஸ் ஆகியவற்றிலிருந்து 31 அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் பலாலி இராணுவ மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

ஆண்களுக்கான இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை இராணுவ அணியும் நீர்கொழும்பு தங்கொட்டுவ ஜனமத அணியும் மோதின.

ellee-2

40 பந்துவீச்சுக்களைக் கொண்ட இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இராணுவ அணி 16 ஓட்டங்கள் பெற்றது.

17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற நிலையில் களமிறங்கிய நீர்கொழும்பு தங்கொட்டுவ ஜனமத அணி 34 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்றது. மிகுதி 6 பந்துகளில் 8 ஓட்டங்கள் பெறாமுடியாது எனவே ஆட்டம் முடிவடைந்து, இராணுவ அணி வெற்றிபெற்றது.

முன்னதாக சனிக்கிழமை (05) இடம்பெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இராணுவ அணி நீர்கொழும்பு பகதர விளையாட்டுக்கழக அணியினை வென்று சம்பியனாகியது.

ellee-3

சம்பியனாகிய அணிக்கு 1 இலட்சம் ரூபா பணப்பரிசிலும், வெற்றிக்கேடயமும், இரண்டாம் இடம்பெற்ற அணிக்கு 50 ஆயிரம் ரூபாவும் கேடயமும் வழங்கப்பட்டன.

இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களுக்கும், சிறப்பாக செயற்பட்ட வீர, வீராங்கனைகளுக்குமான பரிசில்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உள்ளிட்டவர்கள் வழங்கினார்கள்.

Related Posts