சிலர் காயம்: ஒருவர் வைத்தியசாலையில்
1 1/2 மணிநேரம் அவை ஒத்திவைப்பு
ஜே.வி.பி, கூட்டமைப்பு எம்.பி.க்கள் குசும்பு
மக்கள் கலரியிலிருந்தோர் வெளியேற்றம்
விசாரிப்பதற்கு விசேட குழு நியமனம்
அரசாங்கத் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில், சபையே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
இரு தரப்பைச் சேர்ந்த பின்வரிசை எம்.பிக்களும் சபையின் நடுவே கட்டிப்பிடித்து, புரண்டு புரண்டு சண்டையிட்டுக் கொண்டனர். செங்கம்பளத்தில் விழுந்து எழும்ப முடியாது தவித்த எம்.பி.யை மற்றொரு எம்.பி, தனது பாதணி அணிந்திருந்த காலால் எத்தி எத்தியே தாக்கினார். இதனால் அவரது முகம், பந்தாக வீங்கிவிட்டது. கைகலப்புச் சம்பவத்தில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியான சந்தீப் சமரசிங்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நாடாளுமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. படைசேவிதர், செங்கோலைத் தூக்கிவர, சபாநாயர் நேற்றைய தினமும் பிரதான வாயிலின் ஊடாக அவைக்குச் சமூகமளிக்கவில்லை. ஆகையால், சபாநாயகர் வருகை தொடர்பில் படைசேவிதர், ஒலிவாங்கியூடாக நேற்றைய தினம் அறிவிக்கவில்லை. இதனால், அவையில் இருந்த எம்.பிக்கள் சிலர், செங்கோல் எடுத்துவரப்படுவதை அறியவில்லை. அதன்போது, அவையின் உதவியாளர்கள், ‘சேர் சேர்’ என்று கூப்பிட்டு சைகை காட்டினார். ஆசனங்களில் அமர்ந்திருந்த உறுப்பினர்கள், அதன் பின்னரே எழுந்து நின்று, செங்கோலுக்கு மரியாதை செலுத்தினர்.
செங்கோல், மேடையில் வைக்கப்பட்டதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்கிராசனத்தில் அமர்ந்துகொண்டார். சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்துக்குச் செல்வதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு சபாநாயகர் எத்தனித்தார்.
குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினரான தினேஷ் குணவர்தன, எழுந்து நின்று ஒலிவாங்கியை முடுக்கிவிடுமாறு கேட்டார். ‘உறுப்பினர் அவர்களே, உங்களுடைய பிரச்சினையை, சபையின் இந்த நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் கூறுங்கள். அதற்கு நான் சந்தர்ப்பம் தருகிறேன்’ என்று சபாநாயகர் கூறினார். விடாப்பிடியாக நின்ற தினேஷ் எம்.பி, ‘இல்லை இல்லை, இது பெரும் பிரச்சினை, ஜனநாயக சுதந்திரத்தை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குறைக்கப்பட்ட விவகாரம். இதற்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
உடனடியாக எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘குருநாகல் எம்.பி.யான மஹிந்த ராஜபக்ஷவை
நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர் இல்லாவிட்டால் நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருப்பது?’ என்று கேட்டுவிட்டார்.
பொறுமையிழந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், பிரதமரின் பேச்சைத் தொடரவிடாது கூச்சலிட்டனர். சில நிமிடங்கள் நிசப்தமாய் நின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘கொஞ்சம் பொறுங்கள். நான் கூறி முடிக்கும் முன்னரே கூச்சலிடுகின்றீர்கள். அவரை (மஹிந்த) நாங்கள் பாதுகாக்க வேண்டும். இங்கு கூச்சலிடுபவர்களுக்கே அவருடைய பாதுகாப்புத் தேவையில்லாமல் உள்ளது’ என்று கூறியதும், கூச்சலின் சத்தம் அதிகரித்தது. இதன்போது தன்னைச் சுதாகரித்துக்கொண்ட பிரதமர், ‘நான் ஒரு சாதாரண பிரஜை. எனக்கு தொழில்நுட்ப வசனங்கள் தெரியாது. அவை தொடர்பில் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெளிவுபடுத்துவார்’ எனக் கூறி அமர்ந்து விட்டார்.
அடுத்துப் பேசுவதற்கு தயாராகவே இருந்த அமைச்சர் சரத் பொன்சேகா உரையாற்ற எழுந்த போதே, அவருடன் சேர்ந்தாற்போல ஒன்றிணைந்த எதிரணியினரும் எழுந்து கூச்சலிட்டனர். அமருமாறு கத்தினர். கை சைகையைக் காட்டி அமரச் சொன்னார்கள். எனினும் சரத் பொன்சேகா, தனது உரையை நிறுத்தவில்லை. அவரது உரை, மஹிந்தவையும் அவருடைய அரசாங்கத்தையும் வசைபாடுவதாகவே அமைந்திருந்தது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவர் புட்டுப் புட்டு வைத்தார்.
கொதித்தெழுந்த ஒன்றிணைந்த எதிரணியினர், சபைக்கு நடுவாக வந்து, செங்கோலைக் கைப்பற்றுவதற்கு முயன்றனர். எனினும் படைக்கல சேவிதர்கள், செங்கோலைப் பாதுகாத்துக் கொண்டனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அவைக்கு நடுவே வர, எதிரணிப்பக்கம் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், அவர்களுடனேயே அவைக்கு நடுவே வந்தனர்.
பொன்சேகா உரையாற்ற, ஒன்றிணைந்த எதிரணியினர் அவைக்கு நடுவே நின்று கூச்சலிட, பதிலுக்கு ஆளும் தரப்பினரும் சத்தமிட, சபையே பெரும் இரைச்சலாக இருந்தது. எனினும், சபாநாயகருக்கு முன்பாகச் சென்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரான தினேஷ் குணவர்தன, ‘சபாநாயகரே! இது சரியில்லாத வேலை. பொன்சேகாவின் உரையை நிறுத்தவும். பிரதமரும் நீங்களும் இணைந்து நடத்தும் நாடகமா இது?’ என்று கேட்டார்.
‘உறுப்பினரே, யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்ததில் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கும் பொறுப்புண்டு. அது உங்களைவிடவும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் இடமளித்தேன்’ என்று சபாநாயகர் பதிலளித்தார்.
இவ்விருவருக்கும் இடையிலான சம்பாஷணையின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கி மட்டுமே முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில், தினேஷ் எம்.பி, சபாநாயகருக்கு முன்னால் நின்று கர்ச்சித்தார். இதன்போது, பொன்சேகாவின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. பொன்சேகாவைச் சுற்றி நின்றிருந்த ஆளும் தரப்பினர், அவருடைய ஒலிவாங்கியை முடுக்கி விடுமாறு கோரியிருந்தனர். அவைக்கு நடுவே கொதித்தெழுந்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கும் ஆளும் தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றிப்போக, அது கைகலப்பாக மாறியது. சபையே பெரு அல்லோலகல்லோலப்பட்டது. இதன்போது, பொதுமக்கள் கலரியில் இருந்தவர்களும் பாடசாலை மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போக, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான பிரசன்ன ரணவீரவும் பிரதியமைச்சர் பாலித்த தெவரபெருமவும் ஒருவருக்கு ஒருவர் கைநீட்டிக் கொண்டனர். அது கோஷ்டி மோதலாகியது. பின்னர் பிரசன்ன ரணவீரவும் ஐ.தே.க எம்.பி.யான சந்தீப் சமரசிங்கவும் சண்டையிட்டனர்.
ஒரு கணத்தில் சந்தீப் சமரசிங்க, செங்கம்பளத்தில் விழுந்துவிட்டார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்களில் ஒருவர், அவரை எழும்ப விடாது, அவரது முகத்திலேயே தனது சப்பாத்துக் காலினாலேயே எத்தினார். இதனால் அவருடைய முகம் வீங்கிவிட்டது. கும்பலுக்குள் சிக்கிப் புரண்டிருந்த எம்.பியைப் புரட்டிப் புரட்டி எடுத்தனர். எனினும், முன்வரிசை உறுப்பினர்கள் சிலர் அவரைக் காப்பாற்றி, ஆளும் தரப்பினர் பக்கமாக அழைத்துச் சென்றனர். இவ்வாறு மோதலில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களின் ஆடையில், இரத்தக்கறை படிந்திருந்தது.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சபாநாயகர், அவை நடவடிக்கையை பிற்பகல் 1.35 மணியளவில் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டினார். அவையை ஒத்திவைப்பதற்கு முன்னரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் அவையைவிட்டு வெளியேறிவிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றைய தினம் சமுகமளிக்காத நிலையில், புதல்வரான நாமல் ராஜபக்ஷ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் நின்றிருந்தார்.
ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தன்னுடைய டப்லெட்டில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். அக்கட்சியின் மற்றுமொரு எம்.பியான சுனில் ஹந்துன்நெத்தி, தனது அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சபை நடுவே கிடந்த பாதணியை, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க அணிந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்வரிசை எம்.பியான சிவசக்தி ஆனந்தனும், தனது அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சபை நடுவே நின்றிருந்த இரு தரப்பினரும் தத்தமது தரப்பு நியாயங்களை முன்வைத்ததை அவதானிக்க முடிந்தது. சிறிது நேரத்தில், அவர்களும் தத்தம் பக்கங்களுக்குச் சென்று விட்டனர்.
பின்னர் அவை நடவடிக்கை 3:05க்குக் கூடியது. இதன்போது கருத்துரைத்த சபாநாயகர் கூறியதாவது,
‘இன்று (நேற்று) நாடாளுமன்றத்தில் மனுக்கள் சமர்ப்பித்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் தினேஷ் குணவர்தன எழுப்பிய பிரச்சினைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
அத்துடன,பாதுகாப்பு விடயம் தொடர்பில் நன்கு தெரிந்த அமைச்சர் சரத் பொன்சேகா, இது தொடர்பில் மேலதிக விவரங்களைத் தெரிவிப்பார் என்றார். அதன் பின்னர், அமைச்சர் பொன்சேகாவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவையில் அமைதியின்மை தோன்றியது. இந்த அமைதியின்மை, கைகலப்பாக மாறியது. எம்.பிக்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைமைக்கு இது வியாபித்துள்ளது.
இது கவலைக்குரிய விடயமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இச்சம்பவத்தைச் சகலரும் வன்மையாக கண்டித்தனர். சம்பவத்தில் எம்.பிக்கள் பலர் காயமடைந்ததோடு, ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது நாடாளுமன்றுக்கு ஏற்பட்ட இழுக்காகும்.
இதேவேளை, எம்.பி.க்களுக்கு இடையிலான இந்த மோதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கைக்கு அமைய, சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறிய சபாநாயகர், அவையைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை நாளை (இன்று) வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.