எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்! : கமல்

எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த மாதிரி வன்முறை நடந்திருக்காது. போராட்டக்காரர்களிடம் அவர் நேரில் பேசி முடித்து வைத்திருப்பார் என்றார் நடிகர் கமல் ஹாஸன்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்போது காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள்.

அதன் பிறகு போராட்டக் களத்திலும், பிற இடங்களிலும் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வரலாறு காணாதது. அமைதியின் தலைநகரான சென்னை, யுத்தபூமி மாதிரி காட்சி அளித்தது.

நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ட்வீட் செய்த கமல், செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார். அறவழியில் முடித்து வைத்திருப்பார்.

எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது.
போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டம்,” என்றார்.

Related Posts