எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர்

போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை.

vicky0vickneswaran

இதனால் எமது சமூகத்தினரிடம் ஒருவித கொடூர சிந்தனையும் கோபமும் மனதினுள் குடிகொண்டு நின்றுள்ளன. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் சுட்டுக் கொல்லவேண்டிய இலக்குகளாகவே போரின் இருதரப்பாரும் கணித்து செயல்பட்டு வந்தனர்.

எமது பாரம்பரிய நாகரிகப் பண்பாடுகள், மனிதவள மேம்பாட்டுச் சித்தாந்தங்கள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தன. அவற்றால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் உள்ளங்கள், நொந்துபோய் நோயுற்ற எமது உளவியல் பின்னணிகளை மீண்டும் சீரமைக்கவேண்டிய ஒரு கடப்பாடு எமக்கிருக்கின்றது.” – இவ்வாறு கூறுகின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வவுனியாவில் நேற்று தனியார் நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அந்த நிறுவனம் முன்னெடுக்கும் உளவள ஆரோக்கிய நடவடிக்கைகளை மெச்சி, விதந்துரைத்த அவர் “இது எமது மக்களின் தனிமனித ஆளுமையை மேம்படுத்த உதவுஞ் செயலாகும். இவ்வாறான செயல்களால் மனிதனை மனிதன் மனிதனாக மதிக்கும் ஒரு புதிய நாகரீகத்தை எமது சமூகத்தினுள் உட்புகுத்தி வருகின்றார்கள் என்றால் அது மிகையாகாது.” – என்றும் கூறினார்.

அதாவது ” மனிதனை மனிதன் மனிதனாக மதிக்கும் போக்கு இப்போதுதான் நமது சமூகத்துக்கு புதிய ஒரு நாகரிகமாக வருகிறது, முன்னர் இருக்கவில்லை.” – என்ற சாரப்பட அவரது உரை அமைந்தது. அந்த உரையின் முழு விவரமும் வருமாறு:-

பல நல்ல காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ‘நேஷன் பொப்யுலர் ட்ரவல்ஸ் அன்ட் டூ அர்ஸ்’ நிறுவனத்தின் புதிய கிளையினைத் திறந்துவைக்கும் இந்த வைபவத்தில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒரு தனியார் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு ஏன் நீங்கள் செல்கின்றீர்கள் என்று ஓர் அன்பர் கேட்டார். அதற்களித்த பதிலை நான் இங்கு தருகின்றேன். இன்று ஜனநாயக நாடுகளில் மூன்று விதமான சக்தி பீடங்கள் அதிகாரம் செலுத்தி வருகின்றன. முதலாவது அரசாங்கம். அடுத்தது தனியார் துறை, மூன்றாவது, அரசசார்பற்ற நிறுவனங்கள். மூன்றையும் தொழிற்திறன் மிக்கதாய் ஆக்குவது எமது கடமை.

இன்றைய எமது மத்திய அரசாங்கம் பல விதங்களில் மற்றைய இரண்டையும் வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தாலும் எம்மைப் பொறுத்தவரையில் அதாவது மாகாண அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மூன்று நிறுவனங்களையும் சமமாகத்தான் பார்க்கின்றோம். வடமாகாண சபையைப் பலவிதங்களில் செயலிழக்கச் செய்து எம்மால் எதுவும் செய்ய முடியாது என்று உலகறியச் சொல்லிவரும் அரசாங்கத் திடம் இருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

ஆனால் வெளிநாட்டு உதவிகளுடன் பாரிய செயற் திட்டங்களில் அவர்கள் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எம்முள் இருக்கத்தான் செய்கின்றது. அது எப்படி இருப்பினும் எம்மைப் பொறுத்தவரையில் மாகாணத்தில் மக்கள் சார்பான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெறவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் வளமாக வாழவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் அளிக்கப்படவேண்டும். வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும். கல்வி வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவற்றைத் தனியார்களோ, தனியார் நிறுவனங்களோ, புலம்பெயர்ந்தவர்களோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ மக்களுக்கு வழங்க முன்வந்தால் நாங்கள் அதற்கு அனுசரணை வழங்குவோம்.

அரசாங்கம் வெளிநாட்டுப் பணத்துடன் கண்காட்சிக் காரியங்களைத்தான் கரிசனை காட்டிச் செய்து வருகின்றது. மக்களின் நாளாந்த தேவைகள், முன்னுரிமைகள், மனோநிலை பற்றியெல்லாம் அவ்வளவு சிரத்தை கொள்வதாகத் தெரியவில்லை. தனியார் நிறுவனம் என்றவகையில் இந்த நிறுவனமானது இலங்கையின் வானூர்தி இயக்க அதிகாரமையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம். சுற்றுலா சபையினாலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம். உள்ளூர், வெளியூர் போக்குவரத்துப் பிரயாணங்களில் முக்கிய பங்கொன்றை ஏற்று தொழில் செய்து வருகின்றது. தகைமையுடைய ஊழியர்களையும் முகாமைத்துவத்தையும் கொண்டு இயங்குகின்றது.

சுற்றுலாப் பயணங்கள் சம்பந்தமாகப் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதேநேரத்தில் மக்களுக்குப் பயன் தரும்பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். உதாரணத்திற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பலநற்காரியங்களில் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் “நிலாமுற்றம்” என்கின்ற கலந்துரையாடல் நிகழ்வை மாதந்தேறும் நடத்தி வருகின்றார்கள். பல்கலைக்கழக சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், இளைப்பாறிய நீதிபதிகள், வைத்தியர்கள் போன்றோரின் தலைமையில் இந் நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது. மேலும் சமூக சமய ரீதியான விழிப்புணர்வை எம் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் “முட்டிமோதும் மீளாய்வு அரங்கு”என்ற பட்டிமன்ற முறைமை சார்ந்த மக்கள் குறைகேட்டறியும் புதிய அரங்க பரிமாணங்களையும் நாடக உத்திகளைக் கொண்டதுமான நிகழ்ச்சிகளைப் பரீட்சார்த்த ரீதியாகச் செய்து வருகின்றார்கள். மேலும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “உளஒளி” என்கின்ற பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றார்கள். இவ்வாறான சமூகமேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திவரும் அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதிலும் ஈடுபாடு உடையவர்களாகக் காணப்படுகின்றனர். தொழில் வாய்ப்பு ஆலோசனை வழங்கும் அவர்களின் சேவையானது பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான ஆற்றல் படைத்த ஆலோசகர்களை உள்ளடக்கி நடைபெற்றுவருகின்றது. அதேநேரத்தில் நல்லதொரு இன்னொரு கைங்கரியத்திலும் இறங்கியுள்ளார்கள். அதாவது உளநல மேம்பாட்டினையும் உளநல ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உளவளத் துணையாளர்களைக் கொண்டு தொழில் கோரி வருவோருக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கிவருகின்றார்கள்.

இது எமது மக்களின் தனிமனித ஆளுமையை மேம்படுத்த உதவுஞ் செயலாகும். இவ்வாறான செயல்களால் மனிதனை மனிதன் மனிதனாக மதிக்கும் ஒரு புதிய நாகரீகத்தை எமது சமூகத்தினுள் உட்புகுத்தி வருகின்றார்கள் என்றால் அது மிகையாகாது. போர்க்காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது.

கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. இதனால் எமது சமூகத்தினரிடம் ஒருவித கொடூர சிந்தனையும் கோபமும் மனதினுள் குடிகொண்டு நின்றுள்ளன. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் சுட்டுக் கொல்லவேண்டிய இலக்குகளாகவே போரின் இருதரப்பாரும் கணித்து செயல்பட்டு வந்தனர். எமது பாரம்பரிய நாகரிகப் பண்பாடுகள், மனிதவள மேம்பாட்டுச் சித்தாந்தங்கள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தன. அவற்றால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் உள்ளங்கள், நொந்துபோய் நோயுற்ற எமது உளவியல் பின்னணிகளை மீண்டும் சீரமைக்கவேண்டிய ஒரு கடப்பாடு எமக்கிருக்கின்றது. அக்கடப்பாட்டினை உணர்ந்து செயற்பட்டுவரும் இந்த தனியார் நிறுவனம் எமது பாராட்டுக்கும் பயனுள்ள ஊக்குவிப்புக்கும் உரியவர்கள் என்று உய்த்துணர்ந்த பின்னரே நாம் எமது அனுசரணையை வழங்க முன் வந்தோம்.

மேலும் தமக்கு நன்மை தருவதும் மக்களுக்கு நலன்களை வழங்குவதுமான சில வணிக வியாபார முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அது எம் மக்களிடையே சுய வேலை வாய்ப்பினை மேம்படுத்தும் ஒரு திட்டமாக உருவாகித் தற்பொழுது சோப், பவுடர், ஊதுபத்தி, இலத்திரனியல் சாக்குக் கட்டி போன்றவற்றினை எம் மக்கள் சுயமாகச் செய்து அவற்றைச் சந்தைப்படுத்த தொழிற் பயிற்சியையும் வழங்கி வருகின்றார்கள். மேலும் தொழில்களைக் கற்கும் அதே வேளையில் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதங்களை வழங்கி அந்தக் கற்றுவரும் உத்தியோகத்தர்களுக்கு உழைப்பையும் உற்சாகத்தையும் ஊதியத்தையும் ஒருங்கே கொடுத்து வருகின்றார்கள். போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் பலவற்றிற்கு மாதாந்தம் உணவுப் பொருட்களையும் அவர்கள் வழங்கிவருவதாக அறிகின்றேன். எனவே தனியார் நிறுவனம் ஒன்றின் கிளை திறக்கும் நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கேட்டபோது மனிதாபிமானமுள்ள, மக்கட் சேவையில் ஆர்வமுள்ள, மனித நேயப்பண்புகளை வெளிப்படுத்தும் நபர்கள் தனியார்களாக இருந்தால் என்ன, தனித்தவர்களாக இருந்தால் என்ன, அரசாங்கமாக இருந்தால் என்ன, அரசசார்பற்றவர்களாக இருந்தால் என்ன உண்மையான மக்கட் சேவையில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவது எமது கடமை என்ற விதத்திலேயே எனது உடல்நிலைப் பாதிப்பின் மத்தியிலும் இந்த நிகழ்வில் பங்குபற்ற வந்துள்ளேன் என்பதை நண்பருக்குக் கூறிவைத்தேன்.

எமது வட மாகாணசபையின் வாழ்வெல்லை கூடக் கூட ஒன்றை மட்டும் நாம் அவதானித்து வருகின்றோம். எவ்வெந்த விதங்களில் எமது நடவடிக்கைகளுக்குத் தடைகள் விதித்து எம்மை ஸ்தம்பித நிலைக்கு கொண்டுவரமுடியுமோ அவற்றைஎல்லாம் செய்ய எத்தனிக்கின்றது இந்த அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் என்பது எமக்கு நன்றாக விளங்குகின்றது. ஆனால் அதற்காக நாங்கள் வருந்திக் கொண்டுவாளா திருக்கவில்லை. மக்களின் வளமான வாழ்வை அவர்களுக்குப் பெற்றுத்தர வழிமுறைகளை அமைத்தே வருகின்றோம். இதில் தனிப்பட்டவர்களினதும், தனியார் துறையினரதும் தரமான தரவுகளைப் பெற்றே முன்னேறி வருகின்றோம். உதாரணத்திற்குப் பளையில் ஒரு காற்றாலை அமைக்க நடவடிக்கைகள் எடுத்தோம். இவைபற்றி ஆளுநரோ அரசாங்கமோ அறிந்தாராகில் அனைத்து வளங்களையும் வெலிஓயாப் பகுதிக்கு ஆற்றுப்படுத்தக்கூடும் என்ற பயத்தில் சில பிரத்தியேக நடவடிக்கைகளை எடுத்தோம். இதை அறிந்துகொண்ட ஆளுநர் ஆட்சேபணை தெரிவித்தார். ஆனால் எமது மக்கள் சார்பான, மக்கள் நலம்நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அவர் தட்டிக்கழிக்க முடியாத நிலையில் அவற்றை ஏற்று சுமூகமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்.

அரசாங்கதிற்கும் அதன் அலுவலர்களுக்கும் எமக்குமிடையே அன்னியோன்யம் அற்றநிலை காணப்படுவதற்கு அரசியலே காரணம். அரசியலை மறந்து எமது மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கும் ஒருபாங்கு எம் யாவர் மத்தியிலும் உருவாகவேண்டும். தனியார் துறையினரும், தனியார்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வம் காட்டினாலும் அரசாங்கம் அரசியல் எண்ணவிருத்திகளிலேயே அதிகாரத்தைப் பாவித்துவருவது மனவருத்தத்தைத் தருகின்றது. பாரிய யுத்தத்தின் வடுக்களைக் கொண்ட எம்மக்களின் நல்வாழ்வை அரசியல் என்ற சாக்கடையினுள் அமிழ்த்தாதீர் என்று அரசாங்கத்தினிடம் கேட்டுக் கொள்கின்றேன். எமது வருங்காலமானது வசதி படைத்த எமது உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் எந்தளவுக்கு வசதி குறைந்த எம் மக்களுக்கு நேசக் கரத்தை நீட்டி நேர்மையான நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக் கொடுக்கமுன் வருவார்கள் என்பதிலேயே அடங்கியுள்ளது. ‘நேஷன் பொப்யுலர் ட்ரவல்ஸ் அன்ட் டுவர்ஸ்’ என்ற இந்த நிறுவனம் வியாபாரஞ் செய்யும் அதேநேரம் மக்களின் விரிவான சேவைகளிலும் கரிசனைகாட்டி எம்மக்களுக்கு ஆவன செய்து வருவதாலேயே எமது நல்லாசியையும் நல்லனுசரணைகளையும் பெற்றுள்ளார்கள் என்று கூறி என்னை இந்த திறப்பு விழாவிற்கு அழைத்தமைக்கு தம்பி தமிழ்வாணன் நகுலனுக்கு எனது நன்றியறிதல்களை நவின்று என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். – என்றார்.

Related Posts