தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி மத மாற்றம் செய்வதற்காக மாத வருமானம் பெறுகிறார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன்.
நேற்றையதினம் யாழில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் மனைவியின் பெயர் சாவித்திரி. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தனது வருவாய் அறிக்கையை தாக்கல் செய்தபோது, தனது மனைவி சாவித்திரியின் வருவாய் 1,100 டொலர் என குறிப்பிட்டுள்ளார். யார் கொடுக்கிறார்கள். ஐ.எவ்.ஈ.எஸ் என்ற அமைப்பு. சாவித்திரி சுமந்திரனுக்கு கொடுக்கிறார்கள். 1,100 டொலர் என்பது 2 இலட்சம் ரூபாய். இது எதற்காக கொடுக்கப்படுகிறது. மத மாற்றம் செய்வதற்காக.
வடமாகாணசபையில் மத மாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்ற வரைபொன்றை தயாரித்து கொடுத்தேன். ஆனால் அது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. அதை தடுத்து நிறுத்தியவர் சீ.வீ.கே.சிவஞானம்.
மத மாற்றத்திற்காக சுமந்திரனின் மனைவி பணம் பெற்றுக் கொண்டிருந்தால், எப்படி அந்த சட்டம் நிறைவேறும்?
சைவர்கள் யாரையும் மதம் மாற்றியதில்லை. மேற்கு நாடுகளின் ஆதரவுடன் கிறிஸ்தவ மதம், அரச ஆதரவுடன் புத்த மதம், எண்ணெய் வள நாடுகளின் ஆதரவுடன் முகமதிய மதம் உள்ளது. எமக்கு யாருள்ளனர்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.