எம் இன விடுதலைக்காக போராடியவர்களை ஒதுக்கிவிட முடியாது: மாவை

தங்களுடைய உயிரைத் துச்சமாக நினைத்து எங்களின் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாங்கள் தூக்கி வீசிவிட முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மாவை தொடர்ந்து உரையாற்றுகையில், ‘எமது பாதிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களின் எதிர்காலத்தை, வாழ்வாதாரத்தை, புதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்காது நாட்டுக்கு விடுதலை பற்றி பேசுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 21 திட்டங்களை நேரடியாக கொண்டுவந்துள்ளோம்.

முன்னாள் போராளிகள் ஜனநாயக நீதியான நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல பிரேரணைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டுள்ளன.

ஒரு புறம் அரசியல் ரீதியாகவும் மறுபுறம் எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் சிதைந்துபோய் அவலத்துக்குள்ளான பெண்களுடைய வாழ்வாதராத்தை கட்டியெழுப்புவதற்காக போரினால் பாதிக்கப்பட்ட எமது முன்னாள் போராளிகளுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து வாழ்வதற்காக இந்த தேர்தலில் சில இடங்களில் போட்டியிடுகிறார்கள். பெண்கள் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் எவ்வளவு திடமாக செயற்படுகின்றோமோ அதேபோன்று போராளிகளாக இருந்தவர்களினால் தரப்பட்ட வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இது தேர்தல் வெற்றி அல்ல, அவர்களின் எதிர்காலம் வெற்றிபெற வேண்டும்’ என்றார்.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான கே.துரைராஜசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.கனகசபை, பா.அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரணம் (ஜனா), மா.நடராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts