“எம்முடன் இணைந்தால் மட்டுமே உறுதியான தீர்வு” : இரா. சம்பந்தன்

“தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலையும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.

“இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றாலும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமையவுள்ளது.

“இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக அமையப்போவது இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளாகும். எனவே, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts