அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்,
அமைச்சுப் பதவியை அவ்வாறு துறந்தால் மேலும் எமது மக்கள் மீது அட்டூழியங்கள், தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமையகத்தில் நேற்ற புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது –
அளுத்கம, பேருவளை, பதுளை மற்றும் வெலிப்பன்ன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து என்னைச் சிலர் அமைச்சு பதவியை துறக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அமைச்சுப் பதவியை துறப்பதனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவ்வாறு நான் அமைச்சுப் பதவியை துறந்தால் மேலும் எம் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அரசாங்கத்துடன் இருந்து கொண்டே எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு உந்துதலை கொடுப்பதே பலமான விடயமாகும்.
மேலும் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய நேரத்தில் சரியான தீர்மானத்தையும் எடுப்பேன். நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
அரசாங்கம் இனியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்குத் தெரியும். முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தையும் விளக்கியுள்ளேன். உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன். என்று மேலும் அவர் தெரிவித்தார்.