எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளனர்: கேப்பாப்பிலவு மக்கள்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தமது குறைகளை தீர்க்க தம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தமக்கு அரசாங்க காணிகள் வேண்டாம் என்றும், அரசாங்க காணிகளில் இராணுவத்தினரை குடியமர்த்திவிட்டு சொந்த காணிகளை தமக்கு தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறாக தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இன்று 43ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts