எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அதை நாம் மறந்துவிடமுடியாது. ஐநாவில் தீர்மானம் இயற்றும்போது அவர்கள் அதற்கு எதிராக இராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள் அதை நாம் மறந்துவிடமுடியாது. அதற்காக முஸ்லிம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. முஸ்லிம் மக்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர்.
முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் துன்பியல் சம்பவம். போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டார்கள்.சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் முழு மக்களும் வன்னிக்கு வெளியேற்றப்பட்டனர் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு த்தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம்களின் நிகழ்வில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர்.
சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில் அரசியல் தீர்வுகளுக்காக சாத்வீக ரீதியாக போராடினோம் அரசியல் ரீதியாக போராடினோம் ,ஜனநாயக ரீதியாக போராடினோம் , ஆயுத ரீதியாக போராடினோம் .தற்போது இராஜதந்திர ரீதியாக போராடிவருகின்றோம். ஆனால் எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அவர்கள் எல்லா அரசுகளிலுமு் அமைச்சர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் அப்படியிருக்க அவர்களின் பிரச்சினையினை ஏன் தீர்க்கவில்லை.
தந்தை செல்வா தமிழீழத்தை கைவிட்டாலும் நாங்கள் கைவிடமாட்டோம் என முஸ்தபா அன்று தெரிவித்திருந்தார் ஆனால் அது சாத்தியப்படவி்ல்லை. சமஸ்டியும் பெற முடிந்திருக்கவில்லை.
இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அதிகாரப்பகிர்வு முக்கியம். முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். கிழக்கு மாகாண அரசை கவிழ்க்க பலர் முயன்றனர் ஆனால் நாம் ஒத்துழைக்கவில்லை. முதலமைச்சர் யார் என்பது முக்கியமில்லை ஒற்றுமை முக்கியம்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதனை கையாளவேண்டும்.
இன்று அரசியல் தீர்வுக்கான போராடுகின்றோம். எமக்கு நிறைவேற்று அதிகாரம் தேவை.அதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். உங்களின் பிரச்சனைகள் பலவற்றை கூறினீர்கள்.காணி பொலிஸ் நிறைவேற்று அதிகாரம் எமக்கு இருந்தால் நாம் இவற்றை தீர்க்கலாம். அதற்கு நாம் வடக்கு கிழக்கில் ஒற்றுமை பேணவேண்டும்.
மீள்குடியமர்வு தொடர்பில் தீர்வு காணப்படவேண்டும். புனர்வாழ்வு அமைச்சர் இருக்கிறார். வடமாகாண சபை உள்ளது அதற்கு முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார் அவர்களுடன் பேசி பிரச்சனையினை தீர்க்க வேண்டும். இன்று இங்கு வழங்கப்படும் தீர்வுகளுக்கு முக்கிய காரணம் ஐநாவில் நிறைவேறிய தீர்மானமே
எல்லா மக்களையும் நான் நேசிக்கின்றேன் சிங்கள மக்களையும் நேசிக்கின்றேன் . இயற்கையாக நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாடு பூராகவும் சிங்கள மக்கள் 238 வீதம் அதிகரித்துள்ளனர் அதேவேளை கிழக்கில் 888 வீதம் கூடியுள்ளனர் என்று தெரிவித்தார்
முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே!- சுமந்திரன்