வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தோண்டுநாத சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோரின் அழைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
“வடக்கு – கிழக்கில், மலையகத்தில் அல்லல்படும் மக்களுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்று பல்துறைகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து நடத்துகின்ற ‘அபயம் அறக்கட்டளை’ என்ற நிறுவனம் அருமையான சேவை நிறுவனம் லண்டனில் செயற்படுகிறது.
அந்த நிறுவனம் உயிரைக் காப்பாற்றும் சிறப்பான பணியை ஆரம்பித்துள்ளனர்” என்று கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
அபயம் நிறுவனத்தின் சமூகப்பொறுப்புடைய இந்தப் பணிக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ரிஷி தொண்டுநாத சுவாமிகள்,
இதன்போது அபயம் மருத்துவ சேவை நிறுவனம் தொடர்பில் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது;
எமது பிரதேசங்களில் இடம்பெறும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் முழுமையாகத் தடுக்கப்படவேண்டும்.
தற்கொலை செய்பவர் இறந்துவிடுகிறார்களே தவிர, அவரது உறவினர்கள், சுற்றத்தார்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகின்றது. தற்கொலை செய்துகொண்ட ஒருவரால் அவரது குடும்பம் வாழ்நாள் முழுவதும் அல்லல்படும் நிலமை ஏற்படுகின்றது.
ஒரு மகனை அல்லது மகளை இழந்துவிட்ட தாய், அவர் மறையும் வரை தனது பிள்ளையை நினைத்து அழுது, புலம்பிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகின்றது.
இந்த நிலை எமது இடங்களில் காணப்பட்டால் அது எமது பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளும் தவிர்க்கப்படவேண்டும்.
போலியான உலகத்தை அன்றி இயற்கையுடன் ஒன்றித்து வாழப்பழகவேண்டும். அளவுக்கு அதிகமான தேவைகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
உளநெருக்கடி அல்லது ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்படுகின்ற போது அவ்வாறானவர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அவசியம். அவற்றை அவர்கள் இருக்கின்ற குடும்ப சூழலில் பெற்றுவிட முடியாது. அவர்கள் இதற்காக தொலைதூரம் சென்று மருத்துவரின் உதவியை நாடமுடியாது என்பதால் அவ்வாறானவர்கள் ‘அபயம்’ நிறுவனத்தின் 071 071 2345 என்ற அவசர அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த இலக்கத்துடன் தொடர்புகோள்ளும் போது, மருத்துவர் ஒருவர் உடனடியாக உரிய வழிகாட்டலையும் ஆற்றுப்படுத்தலையும் செய்வார்.
மனநெருக்கடியால் அவதிப்படுபவர்கள் மாத்திரமல்லாமல் அவர்களை அவதானிக்கின்ற குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் போன்றவர்களும் குறிப்பிட்ட நபரை இந்த அலைபேசி இலக்கத்தில் கட்டாயம் இணைத்துவிடவேண்டும். அல்லது உரிய ஆலோசனையைப் பெற்று அந்த நபருக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே அபயம் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச ஆலோசனை தொலைபேசிச் சேவையில் இரவு, பகலாக மருத்துவர் ஒருவர் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அடுத்து செய்யப்படவேண்டிய ஆயத்தங்களையும் விரிவாக எடுத்துக் கூறுவார்.
ஆகவே தயக்கமின்றி இந்த தொலைபேசிச் சேவையை நாடி சேவைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் பிரதேசங்களில் இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள், தனியார் துறை உத்தியோகத்தர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிக கவனத்தைச் செலுத்தவேண்டும். ஆகவே ஒரு ஆறுதல் வார்த்தையை அல்லது மருத்துவரின் ஆலோசனை மூலம் தற்கொலையைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஏனெனில் ஒரு உயிர் என்பது எவ்வளவு முக்கியம் என்பது அவர் இறந்த பின்னர் அல்லல்படும் அந்த சமுதாயத்துக்குத்தான் தெரியும்.
இறைவன் உங்களைப் படைத்துள்ளார். நாங்கள் நீதி நெறிமுறையுடன் இந்த உலகில் வாழவேண்டும். அவ்வாறு வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் எங்களுக்கு சில நெருக்குதல்கள் ஏற்படுகின்றமை வழமை. அவை வேலைத் தளமாக இருக்கலாம், குடும்பத்தில் இருக்கின்ற கணவன், மனைவி ஏனையவர்களுடன் இருக்கின்ற சச்சரவாக இருக்கலாம். அல்லது கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கின்ற போது, அதிகளவு பாடச்சுமை, பரீட்சை நெருக்குதல் போன்ற காரணங்களாக இருக்கலாம்.
எவ்வாறான காரணங்களாக இருந்தாலும் இந்த தொலைபேசி சேவையோடு இணைந்து உரிய பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே இந்த தொலைபேசி சேவையை அனைவரும் பயன்படுத்துகின்ற வழிவகைகளை ஏற்படுத்தி, உங்களாலும் சில உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என்ற உறுதிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.