எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை!

கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்ட போது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது, பெரும்பான்மை பாடசாலைகளுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது, ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

1029385401Untitled-1

எனவே எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை எனவும் கூறிய அவர், இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரி, மன்னார் சித்திவிநாயகர் இந்து மத்திய கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை, திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

எமது மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைய வேண்டுமானால் அவர்களுக்கான வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். அதனை அரசாங்கமே செய்ய வேண்டும். கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்கின்ற பொழுது அது அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும்.

அதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அப்படி பாரபட்சம் காட்டப்பட்டால் அது அந்த சமூகத்தையே பாதிக்கும். அவ்வாறான நிலைமைகளில் நாட்டில் தேவையற்ற விரும்பத்தகாத பிரச்சினைகள் உருவாகும். எனவே அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைத்தால் நாடும் சமாதானமாக இருக்கும் மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். இந்த விடயத்தை அரசாங்கத்தின் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே எமது நாட்டில் சமாதானத்திற்கு பங்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். இதனை ஈடு செய்ய முடியாது. எனவே எதிர்வருகின்ற காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கிய காலகட்டமாக அமையும். அது வட, கிழக்கு மக்களாக இருந்தாலும் சரி மலையக மக்களாக இருந்தாலும் சரி. நாங்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். எங்களுக்கள்ளே பேதங்கள் இருக்கக் கூடாது.

நான் கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த நாடு முழுவதற்கும். நான் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். நாங்கள் வெகு விரைவில் கணித விஞ்ஞான ஆசிரியர்கள் 100 பேரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து மலையக பாடசாலைகளுக்கு நியமிக்க இருக்கின்றோம்.

அதன் மூலமாக உங்களுடைய வேலை வாய்ப்பு பிரச்சினை தீர்க்கப்படுகின்றது. எங்களுக்கும் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பார்கள். இப்படி நாங்கள் ஒற்றுமையாக விட்டுக் கொடுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

நான் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்கின்ற பொழுது இங்கிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்து செயற்படுவதை பார்க்கின்ற பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தனியே நான் மட்டும் கைதட்டினால் சத்தம் வராது நாங்கள் எல்லோரும் சேர்ந்து தட்டினால் தான் சத்தம் வரும். இந்த நிலைமை அனைத்து மாகாணங்களிலும் ஏற்பட வேண்டும். அரசியலையும் கல்வி அபிவிருத்தியையும் வெவ்வேறாக பார்க்க வேண்டும். எனவே இதனை சிந்தித்து செய்படுவோம் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

Related Posts