இந்திய மீனவர்களினால் சுரண்டப்படும் எமது கடல் வளத்தினைப் பாதுகாக்க இரு நாட்டு அரசாங்கமும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டினை யாழ். ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியில் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் குட்டைகளை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தினை முன்னெடுக்க இளைஞர் சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், இந்த செயற்பாட்டிற்கு அமைச்சு அணுசரணையாக இருக்கும் என வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.
இந்த அமைப்பு கொழும்பிலும் ஏனைய கரையோரப் பகுதிகளிலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வடமாகாணத்தில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது, பணியாற்றுவதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவதாக கூறியிருந்தும் இதுவரையில், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், அலுவலகம் கூட அமைக்கப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், அந்த விடயங்களை குறித்த அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
கடற்பிரதேசத்தினைப் பொறுத்தவரையில், மாசுக்களை தவிர்க்கும் பிரதேசமாக இலங்கை கடற்பிரதேசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எமது கடல் வளத்தினை இந்திய மீனவர்களும், தென்னிலங்கை மீனவர்களும் சுரண்டிச் செல்கின்றார்கள். இதனை நிறுத்துவதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேசி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இயற்கை வளத்தினைப் பேணிப்பாதுகாப்பது எம் அனைவரின் தலையாய கடமையாகும். எனவே, கடலில் வீசப்பட்ட பிளாட்டிக் மற்றும் கழிவு பொருட்களை அகற்றுவதுடன், எதிர்காலத்தில் கடல் வளங்கள் மாசுபடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
அனைவரும் இணைந்து கடல்வளத்தினைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் கூறினார்.