எமது இளைஞர்களை தொழில்சார் நிபுணர்களாக மாற்றுவதற்கு கல்விமுறையை மாற்றியமைக்கவேண்டும்!

கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகளைத் தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ நாடாளுமன்ற சட்டத்தில் அதிகாரமில்லாது இருக்கின்றது. பல மாவட்டங்களில் இருந்து வந்திருக்கின்ற நிர்மானிகள் சங்கங்கள் என்னிடம் பல பிரச்சினைகளை தெரிவித்தன.

எங்களுடைய பிரதேசங்களில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசினுடைய நிதி ஒதுக்கீடுகள் தனியார் நிலையங்கள் என்பனவும் நிர்மாணப் பணிகளுக்காக நிதி ஓதுக்கீடு செய்வதை நாம் அவதானிக்கின்றோம். இவ் கட்டிட நிர்மான வேலைகளை தென்னிலங்கையிலிருந்து வரும் முதலாளிகள் அரச அனுசரனையுடன் பெற்றுக் கொண்டு இங்குவந்து வேலை செய்கின்றனர்.

அவர்கள் மிக சக்திவாய்ந்த உபகரணங்களுடன் இங்கே வந்து நிர்மாணப் பணிகளைச் செய்கின்றனர். சாதாரண கூலித் தொழிலாளர்களை கூட தென்னிலங்கையிலிருந்து கொண்டு வருகின்றனர்.

இதனால் வடக்கு கிழக்கு மக்களினுடைய பொருளாதாரம் பாதிப்படைகின்றது. இதனை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாதுள்ளது.
எம்முடைய கட்டிட நிர்மாணப் பணிகளில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன.

ஒதுக்கப்படுகின்ற நிதியினை முழுமையாகப் பயன்படுத்தாது அதில் ஒரு பகுதியினை நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்திவிட்டு மீதித் தொகையை நிர்மாணதாரர்கள் கையகப்படுத்துகின்றனர்.

இவ்வாறு மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு தண்டனையை வழங்குவதற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லாதிருக்கிறது. இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். கடந்த அரசாங்கத்தில் பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டனர்.

அவை தற்போது வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகின்றன. உதாரணமாகக் கூறின் ஏ9 பாதையை புனரமைக்கும் ஒப்பந்தம் ஒரு ஒப்பந்ததாரருக்கு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. பின்னர் 10 ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டது.

அதில் முகமாலையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள பாதை மட்டுமே நல்ல நிலையில் இருந்தது. ஆனால் ஏனைய 80 கிலோமீற்றர் பாதைகளும் சீரழிந்து காணப்பட்டன. இதன் அர்த்தம் என்ன? ஊழல் நடக்கின்றது ஒதுக்க்பட்ட பணத்தில் 10 வீதம் கூட செவழிக்கப்படவில்லை என்பதே உண்மை.

எங்களுடைய ஒப்பந்த தாரர்களுக்கு வங்கிகளில் குறிப்பிட்ட நிதிக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. யுத்தத்தின் பின்னர் பல வங்கிகள் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ளன. ஒரு சில வங்கிகளைத் தவிர ஏனைய வங்கிகள் நட்டத்தில் தான் உள்ளன. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் கூட சில வங்கிகள் காணப்படுகின்றன.

இவ் வங்கிகள் வடக்கு கிழக்கிலுள்ள பின்தங்கிய பிரதேசங்கள் மீள் குடியேறிய பிரதேசங்கள் போன்றவற்றில் அவசர அவசரமாக தமது கிளைகளை அமைத்து கடன் உதவிகளை வழங்கினார்கள். ஆனால் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு சென்றனர்.

வங்கிகள் சாதாரண மக்களுக்கு உதவிகரமாக இல்லை வெறுமனே இத்தனை வங்கிகள் உள்ளன என படம் பிடித்துக்காட்டலாமே ஒழிய வேறு ஒன்றும் பயனில்லை. எங்களுடைய நிர்மாணிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை நவீன இயந்திரங்கள் இல்லாமையாகும்.

மேலும் சாதாரணமாக பயிற்றப்பட்ட கூலித் தொழிலாளர்கள் கூட எம்மிடம் இல்லை. ஆனால் தென்னிலங்கை நிர்மாணிகள் நவீன பாரிய இயந்திரங்களை கொண்டுள்ளனர். அவற்றை இங்கு கொண்டு வந்து வேலை செய்கின்றனர். தமது கூலித் தொழிலாளர்களை மேற்கத்தேய நாடுகளுக்கு பயிற்சிகளுக்கு அனுப்புகின்றனர்.

ஆனால் நாம் இவ்வாறான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எம்மைப் போல் போரினால் பாதிப்புற்ற பல உலக நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளன. நாமும் முன்னேற்றமடைய வேண்டும் கட்டட நிர்மாணத் துறையிலே உலக நாடுகளில் தமிழர்கள் தடம்பதித்துள்ளனர்.

அவர்களிடம் அனுபவங்களைப் பகிர்ந்து நிர்மாணத் துறையை முன்னேற்றமடைய செய்ய வேண்டும்.
எமது பல்கலைக்கழகங்களில் நவீன மயப்படுத்தப்பட்ட கல்வி முறைமையில்லை 65 வீதமானவர்கள் கலைப் பாடங்களை பயிலுகின்றனரே தவிர நவீன கல்வி முறைகளில் கற்பதில்லை. 2100க்கும் மேற்பட்ட தாதியர் வெற்றிடங்கள் உள்ளன.

எமது பிரதேச மக்களே எமது மண்ணில் பணி புரிய தயாராக இல்லை. நாங்கள் இப்பொழுது ஒரு இலக்கினை நோக்கி நகர்ந்து செல்கின்றோம் பல்கலைக்கழகங்களில் 65 வீதமான கற்கையினை நவீன கணினி விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றிற்கும் வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

எமது இளைஞர்கள் பலர் வெளிநாடு செல்கின்றனர். அங்கு சென்று நவீன நிபுணத்துவ கற்கைகளை கற்க வேண்டும். சமுதாயத்தில் தொழில்சார் நிபுணர்களை உருவாக்க வேண்டும். 
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்கள் வருகைதரக் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் எம்மிடம் திட்டங்கள் ஏதுவும் இல்லை. எனவே எமது இளைஞர்கள் தொழில்சார் நிபுணர்களாக வளர்வதற்கு எமது கல்வி முறைமையினை மாற்றியமைக்க வேண்டும்.

Related Posts