எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: யாழில் மங்கள

எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என காணாமல் போனோர் குறித்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கிளை காரியாலயம் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர்,

‘பொதுமக்களின் சில காணிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவற்றில் பெரும்பாலான காணிகளை மீள கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அது முன்னெடுக்கப்படும் வேகம் குறைவாகவே உள்ளது. அந்தவகையில் எஞ்சிய பகுதிகளையும் விரைவில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. அதன்படி காணாமல் போனோர் காரியாலயத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு காணாமல் போனோர் குறித்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எமது அரசாங்கத்தில் குறைபாடுகள் காணப்படலாம். அவற்றை நிவர்த்திக்கவே நாம் போராடி வருகின்றோம். நாம் இன்னும் கடந்த கால ஆட்சியாளர்களுடன் போராட வேண்டியுள்ளது. எமது முயற்சிகளை பாழாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறானவர்களை மீறி அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. எமது முயற்சிகள் ஒருபோதும் குறையப் போவதில்லை. மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வலுவான இலங்கைளை உருவாக்குவதற்கான அத்திவாரம் இடப்பட்டு வருகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts